துபாயிலிருந்து சென்னை திரும்பிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஓட்டு எண்ணிக்கை மற்றும் அதற்குப் பிந்தைய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி குடும்பத்துடன் துபாய் சென்ற உதயநிதி, நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், வெற்றி உறுதி என்ற நம்பிக்கையில் தி.மு.க. தலைமை இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில், வாக்கு எண்ணிக்கை நாள் ஏற்பாடுகள் மற்றும் முடிவுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வாக்குப்பதிவுக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் மனைவியுடன் கொடைக்கானல் சென்றிருந்தபோது, மீண்டும் ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் இடம் பெற வேண்டியவர்களின் பட்டியலைத் தயாரித்ததாகவும், ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மற்றும் உதயநிதி ஆகியோர் தங்களது பரிந்துரைப் பட்டியல்களை வழங்கியதாகவும் கட்சி நிர்வாகிகள் கூறினர். தேர்தல் முடிவு தெரிந்த பின் அந்தப் பட்டியல்களை ஒப்பிட்டு இறுதி பட்டியல் தயாரிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.





