சென்னை: தமிழகத்தில் புதிய அரசு அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழகம் (தவெக) மற்றும் அதன் தலைவர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றியை அவர் அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், வெற்றிபெற்ற அனைத்து சட்டசபை உறுப்பினர்களுக்கும் வாழ்த்து கூறிய சீமான், பொறுப்பேற்கவுள்ள விஜய் தலைமையிலான தவெக புதிய அரசுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
தமிழர்களின் வரலாற்றுத் தாயகமான தமிழ்நாட்டின் நலன் மற்றும் உயர்வுக்காக தொடர்ந்து களப்பணியாற்றுவோம் என்றும், மண்ணுக்கும் மக்களுக்கும் பயன் தரும் ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை முன்னெடுத்து, பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி செயல்படும் என்றும் அவர் கூறினார்.





