தவெகவுக்கு ஆதரவு அளிப்பதா என்ற கேள்விக்கு, இதுவரை அதைப் பற்றி சிந்திக்கவோ எந்த முடிவும் எடுக்கவோ இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெகவுக்கு பெரும்பான்மை இல்லை என்ற நிலையில் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படிப் போகும் என்ற கேள்விக்கும் பதிலளித்தார். இடதுசாரிகள் மற்றும் விசிக நீண்ட காலமாக மதச்சார்பற்ற அரசியல் களத்தில் இணைந்தே பயணித்து வருகிறோம் என்றார்.
எதிர்காலத்திலும் முக்கியமான அரசியல் முடிவுகளை இணைந்தே எடுப்போம்; ஆனால் தற்போது எழுப்பப்பட்ட குறிப்பிட்ட கேள்வி குறித்து இன்னும் ஆலோசிக்கவில்லை என்று அவர் கூறினார்.
தமிழகத்தில் ஜாதி, மத சக்திகளுக்கு இடமில்லை என மக்கள் தீர்ப்பு அளித்துள்ளதாகவும், தாங்கள் முன்னெடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
அதிமுக-பாஜ கூட்டணியை வீழ்த்துவதே இலக்காக வைத்து பிரசாரம் செய்தோம்; தேர்தலில் தவெகவை எதிர்ப்பின் இலக்காக திமுக கூட்டணியை முன்னிறுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.





