சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சிக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு டில்லி காங்கிரஸ் தலைமையிடத்திலிருந்து விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. எந்தக் கட்சியுடனும் கூட்டணி இன்றி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் தவெக 10 இடங்கள் குறைவாக உள்ளது. இந்த முடிவுகள் திமுக, அதிமுக ஆகியவற்றை அதிர்ச்சியடையச் செய்ததாகவும், தேர்தல் உடன்பாடுகளில் இருந்த சிறு கட்சிகள் தங்களின் நிலைப்பாடுகளை மீளாய்வு செய்யத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 28 தொகுதிகளில் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தவெகவுக்கு தேவைப்படும் 10 இடங்களில் பாதி அளவுக்கு இடங்கள் காங்கிரஸிடம் இருப்பதால், இந்த சூழலை தமக்கு சாதகமாக மாற்ற முயற்சி நடக்கிறது என கூறப்படுகிறது.

மேலும், தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் இணைவதை பல நிர்வாகிகள் ஆதரித்தாலும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே. செவ்வப்பெருந்தகை மற்றும் மூத்த தலைவர் ப. சிதம்பரம் ஆகியோர் காரணமாக அந்த வாய்ப்பு தடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் முடிவை டில்லி தலைமையிடம் பரிசீலிக்கிறது என்றும், இதனால் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் (விசிக), தேமுதிக போன்ற திமுக கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடுகளிலும் மாற்றம் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.