தமிழ்நாட்டின் திருப்புத்தூர் சட்டசபைத் தொகுதி தேர்தல் முடிவை முன்வைத்து, ஒரே ஓட்டின் வலிமையை மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா வலியுறுத்தியுள்ளார். இந்த முடிவை குழந்தைகளுக்கு காட்டி, ஓட்டின் மதிப்பு எவ்வளவு பெரியது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
திருப்புத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பெரியகருப்பன் போட்டியிட்ட நிலையில், எண்ணிக்கையின் பல சுற்றுகளில் திமுக மற்றும் தவெக இடையே முன்னிலை மாறிமாறி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் போட்டி கடும் இழுபறியாக நீடித்தது.
இறுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரே ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. அவர் 83,375 ஓட்டுகள் பெற்றார்; பெரியகருப்பன் 83,374 ஓட்டுகள் பெற்றார்.
இந்த முடிவை எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்ட ஆனந்த் மஹிந்திரா, “ஒரே ஓட்டு சரித்திரத்தை மாற்றிவிட்டது” என்று கூறினார். மேலும், தேர்தல் கமிஷன் இணையதளத்தில் வெளியான திருப்புத்தூர் முடிவு படத்தை இணைத்து, அந்தப் படத்தை நாட்டின் பள்ளிகளிலும் உலகம் முழுவதும் காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





