மேற்கு வங்கத்தின் பஸ்சிம் வர்தமான் மாவட்டத்தில் உள்ள அசன்சோல் நகர துர்கா தேவி கோவில், சமீபத்திய சட்டசபை தேர்தலில் பா.ஜ. அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
இரு சமூகங்கள் இடையே ஏற்பட்ட பிரச்னை மற்றும் நிர்வாக சிக்கல்கள் காரணமாக இந்த கோவில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. ஸ்ரீ ஸ்ரீ துர்காமாதா அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், இதுவரை துர்கா பூஜை மற்றும் லட்சுமி பூஜை காலங்களில் மட்டுமே திறக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் பஸ்சிம் வர்தமான் மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டசபை தொகுதிகளையும் பா.ஜ. கைப்பற்றியது. அசன்சோல் உத்தர் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்னேந்து முகர்ஜி, வெற்றி பெற்றால் கோவிலை தினமும் திறக்க நடவடிக்கை எடுப்பதாக பிரசாரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார்.
தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆன அவர் செவ்வாய்க்கிழமை கோவிலுக்கு வந்தார். அங்கு திரண்டிருந்த பா.ஜ. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கோவில் மீண்டும் திறக்கப்பட்டு, முகர்ஜியும் அவர்களுடன் இணைந்து வழிபாடு செய்தார்.





