வடகிழக்கு மாநிலமான அசாமில் பா.ஜ. தலைமையிலான கூட்டணி அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது. பா.ஜ.வைச் சேர்ந்த ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில், மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் “மக்களின் தீர்ப்பு அல்ல; அது ஒரு சதி” என திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார். மேலும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மம்தாவின் பேட்டிக்கு பதிலளித்த ஹிமந்த பிஸ்வ சர்மா, அவர் தானாக விலகாவிட்டால் பதவியில் இருந்து நீக்குவதே ஒரே வழி என கூறினார். கவர்னர் ஒரு குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து, அதன் பின் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்; மம்தாவின் விருப்பப்படி நாடு இயங்காது என்றும் அவர் கூறினார்.

மேலும், திரிணமுல் காங்கிரசிடம் இருந்து 100 தொகுதிகள் “பறிக்கப்பட்டன” என்ற மம்தாவின் கூற்றை அவர் கேள்விக்குள்ளாக்கினார். அதே தர்க்கப்படி அசாமில் காங்கிரஸ் வென்ற 19 தொகுதிகள் பா.ஜ.விடமிருந்து “பறிக்கப்பட்டவையா” எனக் கேட்டு, தோல்வியை ஏற்க முடியாமல் அவர் பேசுகிறார் எனவும் விமர்சித்தார்.