குவஹாத்தி: அசாம் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணி 126 இடங்களில் 102 இடங்களை கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றதற்கு, 2023ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறை முக்கிய காரணமாக இருந்ததாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மூன்றாவது முறையாக தே.ஜ. கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இதில் பா.ஜ.க. 82 இடங்களிலும், கூட்டணி கட்சிகளான போடோலாந்து மக்கள் முன்னணி (BPF) மற்றும் அசாம் கண பரிஷத் (AGP) தலா 10 இடங்களிலும் வென்றன.

முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) வெற்றிக்கு சிறுபான்மையினர் ஓட்டு வங்கி முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் 2023ல் நடந்த மறுவரையறையால், சிறுபான்மையினர் செல்வாக்கு அதிகமாக இருந்த தொகுதிகள் 35 இலிருந்து 25 ஆக சுருங்கியதாகவும், இதனால் காங்கிரஸ் மற்றும் AIUDF தங்கள் கோட்டைகளாக கருதிய பகுதிகளிலும் பின்னடைவை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை உயராதபோதும், பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டு தொகுதிகள் 16 இலிருந்து 19 ஆக உயர்ந்தன; பட்டியலினத்தவருக்கான ஒதுக்கீட்டு தொகுதிகள் ஒன்று கூடுதலாகி 9 ஆகின. குறிப்பாக, வங்கமொழி பேசும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பார்பெட்டா மற்றும் கோல்பாரா மேற்கு தொகுதிகள் பழங்குடி/பட்டியலின ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட நிலையில், முன்பு காங்கிரஸ் வசம் இருந்த இந்த இரு தொகுதிகளையும் இப்போது பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.

போடோலாந்து பகுதியில் ஒதுக்கீட்டு தொகுதிகள் 11 இலிருந்து 15 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தே.ஜ. கூட்டணியில் உள்ள BPF 10 இடங்களை எளிதாக வென்றதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தல்களில் 16 இடங்கள் வரை பெற்ற AIUDF இந்த முறை இரண்டு இடங்களையே வென்றுள்ளது; அவையும் சிறுபான்மையினர் செல்வாக்கு தொடரும் 25 தொகுதிகளிலேயே கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்பே, மறுவரையறை காரணமாக பா.ஜ.க. அதிக இடங்களை வெல்லும் என முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருந்த நிலையில், முடிவுகள் அதனை உறுதிப்படுத்துவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.