சென்னை: புதியதாக அமைய உள்ள தவெக அரசில் காங்கிரஸ் ஒரு அங்கமாக இருக்கும் என்றும், அது நிபந்தனையுடன் வழங்கப்படும் ஆதரவு என்றும் தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியின் எம்எல்ஏக்களுடன் இணைந்து தவெக தலைவர் விஜயை சந்தித்து முழு ஆதரவை தெரிவித்ததாக அவர் கூறினார். அதற்கான ஆதரவு கடிதமும் வழங்கப்பட்டதாகவும், விஜய் சிறப்பாக செயல்பட வாழ்த்தியதாகவும் தெரிவித்தார்.
மேலும் சில கட்சிகளும் ஆதரவு தரும் என எதிர்பார்ப்பதாக கூறிய அவர், தமிழகத்தில் கூட்டணி அரசு அமைவது உறுதி என்றார். வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது அல்ல; இந்த அரசின் ஒரு பகுதியாகவே காங்கிரஸ் இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.
தேர்தல் நேரத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்து 5 எம்எல்ஏக்களை பெற்றுவிட்டு இப்போது தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பது நம்பிக்கை துரோகம் அல்லவா என்ற கேள்விக்கு, மக்களின் தீர்ப்பே இறுதியானது என்று கிரிஷ் சோடங்கர் பதிலளித்தார்.





