கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் தவெகவைச் சேர்ந்த கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வழக்கமான அரசியல் வேட்பாளர்களிலிருந்து மாறுபட்ட பின்னணியால் அவர் கவனம் பெற்றுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது வெற்றி பெற்று மக்களுக்கு சேவையாற்றுவேன் என்று அவர் கூறியிருந்தார்.

வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, அவர் 1,46,466 வாக்குகள் பெற்றதுடன் 40,140 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

கனிமொழி சந்தோஷ் ஜோதிடக் கலையில் பட்டம் பெற்றவர். தனியாக ஜோதிடம் மையம் நடத்தி வருவதுடன், ஆன்லைன் மூலமாகவும் ஆலோசனைகள் வழங்குகிறார். எந்த ராசிகளுக்கு காதல் அமையும் போன்ற தலைப்புகளில் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிடும் பழக்கத்தால் அவரது பிரபலத்துக்கு மேலும் ஊக்கம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் பெரிய அளவில் பின்தொடர்பவர்கள் உள்ள நிலையில், 37 வயதில் முதல்முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது பேசுபொருளாகியுள்ளது.

ஜோதிடம் மட்டுமல்லாமல் பிசியோதெரபி, வாஸ்து ஆலோசனை, டைல்ஸ் மற்றும் கிரானைட் தொழில் உள்ளிட்ட பல துறைகளிலும் அவர் செயல்பட்டு வந்ததாக தகவல். அண்மையில் ஜோதிடம் மூலம் கேன்சரை குணப்படுத்தலாம் என கூறிய வீடியோ வெளியிட்டதையடுத்து அவர் சர்ச்சையில் சிக்கியதாகவும் செய்தி குறிப்பிடுகிறது.