தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ‘யாருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லை’ எனப்படும் நோட்டா (NOTA) தேர்வுக்கு வாக்காளர்களிடையே பெரிய ஆதரவு இல்லை என்பது புள்ளிவிவரங்களில் தெரிய வந்துள்ளது.
இந்த ஐந்து மாநிலங்களில் அசாமில் நோட்டா வாக்குகள் 1.29% ஆக அதிகமாக பதிவானது. அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 0.81%, புதுச்சேரியில் 0.73% மற்றும் கேரளத்தில் 0.58% வாக்காளர்கள் நோட்டாவைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
தமிழகத்தில் நோட்டா பயன்பாடு 0.41% மட்டுமே. மொத்தம் 1,99,801 பேர் எந்த வேட்பாளரையும் தேர்வு செய்யாமல் நோட்டாவை பயன்படுத்தியுள்ளனர்.
2013ஆம் ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நோட்டா பொத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் ஆணைய புள்ளிவிவரங்களின்படி, கடந்த மூன்று மக்களவைத் தேர்தல்களில் நோட்டா வாக்குகள் படிப்படியாக குறைந்துள்ளன; 2014ல் 1.08% இருந்தது, 2024ல் 0.99% ஆக குறைந்துள்ளது.
2013க்கு முன்பு எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் ‘படிவம் 49-O’ நிரப்பி தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்கும் வசதி இருந்தது. ஆனால், வாக்குச்சாவடியிலேயே அந்தப் படிவத்தை நிரப்ப வேண்டியதால் வாக்குரிமை ரகசியம் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, EVM-ல் வேட்பாளர்கள் பட்டியலின் கடைசியில் நோட்டாவுக்கும் தனிப் பொத்தான் சேர்க்கப்பட்டது.





