பஞ்சாப்பில் அடுத்தடுத்து நடந்ததாக கூறப்படும் வெடிப்பு சம்பவங்கள் மாநிலம் முழுவதும் பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளது. மே 5 இரவு அமிர்தசரஸில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) தலைமையகப் பகுதி அருகே வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு முந்தைய நாளில் ஜலந்தர் பகுதியில் ஸ்கூட்டரில் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அந்த ஸ்கூட்டரை ஓட்டி வந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அமிர்தசரஸ் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறினர். பிஎஸ்எப் தலைமையகப் பகுதி அருகே போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
வெடிகுண்டு செயலிழப்பு குழுவினரும் தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்துக்கு வந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். அமிர்தசரஸ் எஸ்எஸ்பி சுஹைல் மிர் காசிம் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் யாரோ ஒருவர் எல்லைச் சுவரை நோக்கி ஏதோ ஒன்றை வீசியதாகவும், அதுவே வெடிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரியவந்ததாக தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவற்றை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ச்சியான இந்த சம்பவங்களைத் தொடர்ந்து பஞ்சாப்பு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.





