முதல்வர் மு.க.ஸ்டாலின் தோல்வி “வருத்தமளிக்கிறது” என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ஸ்டாலின் நீண்ட அனுபவமுள்ள அரசியல்வாதி என்பதால் இந்த முடிவு மனவருத்தம் தருவதாகவும் அவர் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய தாகூர், தமிழக வெற்றிக்கழக (தவெக) தலைவர் விஜய் பாஜவுக்கு எதிராக நின்று வெற்றி பெற்றதாகவும், திருப்பரங்குன்றத்தில் தவெக வேட்பாளரும் வெற்றி பெற்றதாகவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் மதவாத சக்திகள் நுழைய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையகம் தனது நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தாகூர் கூறினார். காங்கிரஸ் அரசியல் விவகாரக் குழு நேற்று இரவு எடுத்த முடிவை தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்திற்குள் பாஜவும் ஆர்எஸ்எஸும் வரக்கூடாது என்று வலியுறுத்திய தாகூர், திமுகவுடன் கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்டதாக கூறினார். தமிழக வாக்காளர்கள் தெளிவான முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், தமிழக காங்கிரஸ் தலைவரின் தோல்வியும் நடந்திருக்கக் கூடாது என்று கூறிய அவர், ராஜிவ் காந்தி நினைவிடத்துடன் தொடர்புடைய ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அந்த தோல்வி வருத்தம் தருவதாகவும் தெரிவித்தார்.





