சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களில் 10 இடங்கள் குறைவாக உள்ளது. இதையடுத்து, திமுக கூட்டணியிலிருந்து விலகிய 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ், தவெகவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்கியுள்ளது.
ஆட்சி அமைக்க விஜய் கவர்னரிடம் முறைப்படி உரிமை கோரிய நிலையில், காங்கிரஸ் தரப்பில் இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு இருக்கும் என விஜய் கூறியிருந்தார்.
ஆனால் காங்கிரசுக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண் அமைச்சருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற பேச்சு நிலவுவதால், குளச்சல் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் பெயர் குறிப்பிடப்படுகிறது.
காங்கிரஸ் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைப்பதால், தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் நிலை உருவாகியுள்ளது.





