திருவனந்தபுரம்: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) ‘இண்டி’ கூட்டணியில் இணைக்க அழைப்பு விடுக்கப்படலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.
கேரள சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து தனியார் ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 140 தொகுதிகளில் 100 இடங்களில் வென்று தெளிவான ஆதரவை பெற்றதாக அவர் கூறினார்.
காங்கிரசில் அனுபவமும் தகுதியும் கொண்ட தலைவர்கள் பலர் இருப்பதாக குறிப்பிட்ட தரூர், முதல்வர் தேர்வு “மகிழ்ச்சியான சவால்” என்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்து, கட்சி மேலிடத்தின் ஒப்புதலுடன் விரைவில் முதல்வர் பெயர் அறிவிக்கப்படும்; இதில் இழுபறி இருக்காது என்றும் தெரிவித்தார்.
தமிழக அரசியல் சூழல் குறித்து பேசும்போது, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜயின் த.வெ.க.க்கு வாழ்த்துகள் தெரிவித்தார். தற்போதைய நிலவரத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க இன்னும் சில இடங்கள் தேவைப்படலாம் என்றும், ‘இண்டி’ கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளிடம் போதிய எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாகவும் கூறினார். “என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறிய அவர், ‘இண்டி’ கூட்டணியில் இணைய விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்றார்.





