சிவகங்கை: திருப்புத்தூரில் ஒரு ஓட்டுக்கான கணக்கெடுப்பில் பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ஓட்டு எண்ணும் மையத்தில் ஒரு ஓட்டு வித்தியாசமாக போட்டி மாறியதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. த.வெ.க. வேட்பாளருக்கு ஆதரவாக பா.ஜ. நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓட்டு எண்ணிக்கையின் பெரும்பகுதியில் அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் இருந்தார். ஆனால் கடைசி மூன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ‘டிஸ்பிளே’ பழுதானதாக கூறப்பட்டதால், வாக்கு உறுதிப்படுத்தும் இயந்திரத்தில் உள்ள சீட்டுகளை (விவிபேட்) எண்ண அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அந்த சீட்டுகள் எண்ணப்பட்ட பின் த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு ஓட்டில் முன்னிலை பெற்றதாக தெரிய வந்தது. இரவு 11.30 மணிக்குப் பிறகும் உடனடியாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல், எண்ணிக்கை தொடர்ந்தது.

இதையடுத்து முன்பு எண்ணப்படாமல் இருந்த 306 தபால் ஓட்டுகளை அதிகாரிகள் எண்ணத் தொடங்கினர். அதிலும் பெரியகருப்பனுக்கு சாதகமாக முடிவு மாறவில்லை. பின்னர் தேர்தல் கமிஷன் விதிமுறைகளை மேற்கோள் காட்டி ‘ரேண்டமைசேஷன்’ முறையில் ஐந்து விவிபேட் இயந்திரங்களின் சீட்டுகளை எண்ணி, அதிகாலை 2.00 மணியளவில் பணியை முடித்தனர்.

இறுதிக் கணக்கில் சீனிவாச சேதுபதி 83,375 ஓட்டுகளும், பெரியகருப்பன் 83,374 ஓட்டுகளும் பெற்றதாகவும், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் த.வெ.க. வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.