பெங்களூரு–சென்னை–ஹைதராபாத் நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் திட்டத்துக்கான வழித்தடத்தைத் தேர்வு செய்ய ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.93 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், முக்கிய நகரங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தவும் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கவும் ஏழு வழித்தடங்களில் புல்லட் ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதில் தெற்கு ரயில்வே எல்லைக்குள் சென்னை–பெங்களூரு மற்றும் சென்னை–ஹைதராபாத் (தெலுங்கானா) வழித்தடங்களில் புல்லட் ரயில் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற இந்த மூன்று நகரங்களின் அடுத்தகட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு திட்டம் வடிவமைக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான வழித்தடத் தேர்வில், பெங்களூரிலிருந்து கோலார்–சித்தூர்–பரந்தூர்–பூந்தமல்லி வழியாக சென்னை, மேலும் சென்னையிலிருந்து ரேணிகுண்டா–நெல்லூர்–குண்டூர்–அமராவதி வழியாக ஹைதராபாத் எனும் தற்காலிக சீரமைப்பு பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
திட்டம் நடைமுறைக்கு வந்தால், சென்னை–பெங்களூரு பயணம் சுமார் 1 மணி 13 நிமிடங்களிலும், சென்னை–ஹைதராபாத் பயணம் சுமார் 2 மணி 55 நிமிடங்களிலும் முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.





