சென்னை: தவெகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காத கவர்னரை கண்டித்து, மே 8 அன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தரப்பில், முதல்வராக பொறுப்பேற்பதில் தவெக தலைவர் விஜய்க்கு சிக்கல் உருவாகியுள்ளதாகவும், பிற கட்சிகள் ஆதரவு குறித்து இன்னும் தெளிவான முடிவுகள் வெளியாகாத சூழலில் நிலைமை நீடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதங்கள் கிடைத்தால் மட்டுமே ஆட்சியமைப்பதற்கான அழைப்பை விடுக்க முடியும் என கவர்னர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கவர்னரின் இந்த நிலைப்பாட்டை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் கண்டித்து வருவதாகவும், தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ் இதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட அறிக்கையில், சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தவெக ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் மத்திய பாஜ அரசு மற்றும் கவர்னர் செயல்படுவதாக குற்றம்சாட்டி, அவர்களை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மே 8 காலை 11 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைமையகங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் அண்ணா சாலை தாராப்பூர் டவர் அருகில் மாநிலத் தலைவர் தலைமையில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.