சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேர்வை முன்னிட்டு, தி.மு.க. சட்டமன்றக் குழுத் தலைவரைத் தேர்வு செய்வது குறித்து கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழுவில் ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதன்கிழமை மாலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ‘குறிஞ்சி இல்லம்’ வளாகத்தில், தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்திய சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வென்று அதிக இடங்களை பெற்ற கட்சியாக உருவெடுத்த நிலையில், தி.மு.க. 59 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இதையடுத்து, தி.மு.க. சட்டமன்றக் குழுத் தலைவரைத் தேர்வு செய்ய இன்று மாலை அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

சட்டசபையில் தி.மு.க. குழுத் தலைவராக தேர்வாகும் நபரே எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பார். அந்த பதவி உதயநிதிக்கு வழங்கப்படலாம் என்றும், அவர் மறுத்தால் கட்சியின் முதன்மை செயலர் கே.என். நேரு பெயர் பரிசீலனையில் இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, செந்தில் பாலாஜி, அமைப்பு செயலர் ஆர்.எஸ். பாரதி, செய்தி தொடர்பு செயலர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துணை பொதுச்செயலர் கனிமொழி பங்கேற்கவில்லை. மேலும், சட்டசபை கொறடாவாக எ.வ. வேலுவையும், பொருளாளராக ஐ. பெரியசாமியையும் தேர்வு செய்வது, கட்சி தோல்வி மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.