புதுச்சேரியில் தங்கியுள்ள தங்களது கட்சி எம்எல்ஏக்களை சந்திக்க, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) புதன்கிழமை சென்னையிலிருந்து புதுச்சேரி புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக ஆட்சியமைப்பதற்கான முயற்சிகள் தொடர்பாக நிலவும் குழப்பமான சூழலிலேயே இந்த நகர்வு இடம்பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட்கள், விசிக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளன. தவெகவின் கோரிக்கையை ஐயுஎம்எல் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்களின் ஒரு பகுதி தவெகவுக்கு ஆதரவு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இபிஎஸின் நிலைப்பாடு வெளிப்படையாகத் தெரியாத நிலையில், 20க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த குழுவில் ஓ.எஸ். மணியன், தளவாய் சுந்தரம், மோகன், அருள்மொழி தேவன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வெங்கடாசலம் உள்ளிட்டோர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெகவுக்கு போதிய ஆதரவு இன்னும் கிடைக்காத நிலையில், இபிஎஸ் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.





