சென்னை: தமிழகத்தில் அடுத்த அரசு அமைப்பது தொடர்பான குழப்பம் நீடிக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் இன்று கவர்னர் அர்லேக்கரை மீண்டும் சந்தித்து பேசினார்.
அப்போது, 113 எம்எல்ஏக்களை வைத்து எப்படி ஆட்சி அமைப்பீர்கள், தவெக அரசுக்கு எந்த கட்சிகள் ஆதரவு தரும், பதவி ஏற்ற பின் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கை எதன் அடிப்படையில் என்பதுபோன்ற கேள்விகளை கவர்னர் முன்வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், 118 எம்எல்ஏ ஆதரவை நிரூபித்தால் மட்டுமே பதவிப் பிரமாணம் செய்ய முடியும் எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்ததாக தகவல்.
இதற்கு விஜய், விதிமுறைகளின்படி தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்து விஜய் அளித்த விளக்கம் கவர்னருக்கு திருப்தியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது அல்லது பதவிப் பிரமாணம் நடத்துவது குறித்து கவர்னர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸையும் நேரில் சந்திக்க கவர்னர் அழைத்துள்ள நிலையில், அடுத்ததாக காபந்து முதல்வர் ஸ்டாலினையும் அழைத்து பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





