நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய மனுவை எண்ணிட்டு, விசாரணைக்கு ஏற்றதா (maintainability) என்ற தலைப்பில் விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றம் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கொடுங்கையூரைச் சேர்ந்த எம். ராஜ்குமார் தாக்கல் செய்த இந்த மனுவில், வருமான வரித்துறை சோதனைகளின்போது பெறப்பட்ட ஆவணங்கள், விஜயின் வாக்குமூலம், மதிப்பீட்டு நடவடிக்கைகள் மற்றும் ரூ.1.50 கோடி அபராதம் விதித்த உத்தரவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, வருமான வரி சட்டத்தின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும், வருமானத்தை மறைத்ததாகக் கூறி மோசடி, குற்றச் சதி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு தேவையான முகாந்திரம் உள்ளதா என்பதை ஆராய, சம்பந்தப்பட்ட ஆவணங்களை அமலாக்க இயக்குநரகத்துக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை பதிவுத்துறை எண்ணிடாமல் வைத்திருந்த நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விவகாரம் வந்தது. மனு தாக்கல் செய்யப்பட்டால், விசாரணைக்கு ஏற்றதா என்பதை முடிவு செய்வதற்காக எண்ணிடும் பணியை நிறுத்தி வைக்கக் கூடாது எனக் கூறிய அமர்வு, மனுவை எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டது.

உத்தரவின் அடிப்படையில், விஜய்க்கு எதிரான மனுவின் எண்ணிடும் நடைமுறை இன்று முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.