இந்தியா மற்றும் வியட்நாம் இடையிலான உறவில் புதிய மைல்கல்லாக, வர்த்தகம், பாதுகாப்பு, அரியவகை கனிம வளங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் 13 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

சமீபத்தில் பதவியேற்ற வியட்நாம் அதிபர் டோ லாம், தனது முதல் அரசுமுறை வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்தார். புதுடில்லியில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில், உறவை அடுத்த கட்டமான “மேம்பட்ட விரிவான கூட்டாண்மை” நிலைக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு பின், வர்த்தகம், பாதுகாப்பு, அரிய கனிம வளங்கள், கல்வி, வங்கி மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, மருந்து பொருட்கள், கலாசாரம் உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தென் சீனக் கடல் பகுதியில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட இரு நாடுகளும் உறுதி தெரிவித்தன.

வியட்நாம் இந்தியாவின் முக்கிய நட்பு நாடு என பிரதமர் மோடி கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் இருதரப்பு நட்புறவு வேகமாகவும் விரிவாகவும் வளர்ந்துள்ளதாகவும், புதிய கட்டமைப்பின் மூலம் கலாசாரம், மக்கள் தொடர்பு, பாதுகாப்பு, விநியோகத் தொடர் உள்ளிட்ட துறைகளில் கூட்டுறவு மேலும் உயர்வடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இருநாடுகளுக்கிடையிலான பரஸ்பர வர்த்தகத்தை இரட்டிப்பாக்கி, 2030க்குள் ரூ.2.80 லட்சம் கோடி அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மோடி கூறினார். மருந்து பொருட்கள் விற்பனை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் வியட்நாமில் இந்திய மருந்துகள் எளிதாக கிடைக்கும் என்றும், இந்திய வேளாண் பொருட்கள் மற்றும் மீன் வளத்தை வியட்நாமுக்கு எளிதாக ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். விரைவில் இந்திய திராட்சை மற்றும் மாதுளை பழங்களும் வியட்நாமில் கிடைக்கும் எனவும் கூறினார்.