சென்னை: விஜய்யை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழக மக்களின் தீர்ப்பை அவமதிப்பதற்கு சமம் என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
வெளியிட்ட அறிக்கையில், சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் வழங்கவில்லை என்றும், இது தமிழக அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத தீர்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்கள் தீர்ப்பை மதித்து பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று அறிவித்திருப்பதை அரசியல் முதிர்ச்சியாகக் கருதி மதிப்பதாகவும் கூறினார்.
அதேபோல் அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் தங்களின் கடமையை நிறைவேற்ற வேண்டும் என கமல் வலியுறுத்தினார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ள நிலையில், அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது மக்களின் ஆணையை மதிக்காத செயலாகும் என்றார்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட 233 உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாத நிலை மாநிலத்திற்கு அவமானம் என்றும், மக்களாட்சிக்கு சேதம் என்றும் அவர் கூறினார். எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியபடி பெரும்பான்மை ராஜ் பவனில் அல்ல, சட்டசபை தரையில்தான் நிரூபிக்கப்பட வேண்டும் என்றும், இது கட்சி அரசியல் அல்ல; ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கை குரல் என்றும் அவர் தெரிவித்தார்.





