சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கும் செயல்முறையில் தடையோ தாமதமோ ஏற்பட்டால், அது பாஜவின் மறைமுக அரசியல் நடவடிக்கையாகவே பார்க்கப்படும் என்று நடிகையும் பாஜ நிர்வாகியுமான கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
தன் அறிக்கையில், தமிழக மக்கள் விஜய்க்கு பெரும் ஆதரவு அளித்துள்ளதாகவும், தவெக ஒரு முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். எனவே, தவெக-ஐ ஆட்சி அமைக்க அழைத்து, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிப்பது கவர்னரின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த செயல்முறையை தாமதப்படுத்தும் எந்த நடவடிக்கையும் தமிழக மக்களால் மட்டுமல்ல, பிறராலும் அரசியல் தந்திரமாகவே பார்க்கப்படும் என்றும், அதற்கு பாஜவே காரணம் என்ற சந்தேகம் உருவாகும் என்றும் கஸ்தூரி தெரிவித்தார்.
மேலும், அடுத்த அரசு அமைவதில் தாம் குறுக்கே நிற்கப்போவதில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆகவே, மக்கள் சந்தேகம் பாஜ மீது மட்டுமே திரும்பும்; எந்த இடையூறும் இன்றி புதிய அரசு விரைவில் அமைவதை உறுதி செய்வது பாஜவின் சொந்த நலனுக்கே உகந்தது என்றும் அவர் கூறினார்.





