கேரள சட்டசபை தேர்தலில் 140 தொகுதிகளில் காங். தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யூடிஎஃப்) 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்த இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) 35 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு காங். மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், முதல்வர் பதவியை யார் பெறுவது என்ற கேள்வியில் கட்சிக்குள் கடும் போட்டி உருவாகியுள்ளது. மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன் ஆகியோர் முக்கிய போட்டியாளர்களாகக் கருதப்படுவதால், வெற்றியை கொண்டாட முடியாத குழப்பம் தொண்டர்களிடையே இருப்பதாக கூறப்படுகிறது.
ஆலப்புழா மக்களவைத் தொகுதி எம்.பி.யான கே.சி.வேணுகோபால், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட மேலிட தலைவர்களுடன் நெருக்கம் உள்ளதாகவும், தன்னை முதல்வராக ஆதரிப்பதாக காங். எம்.எல்.ஏ.க்கள் 63 பேரில் 47 பேர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு மாறாக, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீஷனின் அயராத உழைப்பே கூட்டணியின் வெற்றிக்கு காரணம் என்றும், அவரை முதல்வராக்காவிட்டால் அது கட்சி செய்யும் “வரலாற்றுப் பிழை” என்றும் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், முஸ்லீம் லீக், கேரள ஜோசப் காங். போன்ற கூட்டணி கட்சிகளும் சதீஷனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வரை தேர்வு செய்ய காங். மத்திய பார்வையாளர்களாக சச்சின் பைலட், கே.ஜே.ஜார்ஜ், கன்னையா குமார், இம்ரான் பிரதாப்கர்ஹி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் புதன்கிழமை கேரளாவுக்கு வந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை தனித்தனியாக சந்தித்து கருத்து கேட்டு, அதன் அடிப்படையில் கார்கேவுக்கு அறிக்கை அனுப்ப உள்ளனர்.





