அரபிக்கடலில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தத்தளித்த இந்திய சரக்கு கப்பல் ‘எம்.வி. கவுதம்’-ஐ பாகிஸ்தான் கடற்படையினர் மீட்டு மனிதாபிமான உதவிகளை வழங்கியதாக இஸ்லாமாபாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமனில் இருந்து இந்தியா நோக்கி பயணித்த இந்த கப்பலில் என்ஜின் செயலிழந்ததால், நடுக்கடலில் நகர முடியாமல் சிக்கியது. கப்பலில் இருந்த ஊழியர்கள் அவசர உதவி கோரி மும்பையில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் அனுப்பினர்.
அந்த தகவலைத் தொடர்ந்து இந்திய தரப்பு பாகிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவி கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாகிஸ்தான் கடற்படை மற்றும் கடல்சார் பாதுகாப்பு முகமை இணைந்து நடவடிக்கை எடுத்து ‘பி.எம்.எஸ்.எஸ். காஷ்மீர்’ கப்பலை மீட்பு பணிக்காக அனுப்பியது.
மீட்பு குழுவினர் நீண்ட நேரம் கடலில் தவித்து சோர்ந்திருந்த ஊழியர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கியதுடன் மருத்துவ உதவியும் செய்தனர். மேலும் கப்பலின் கோளாறுகளை சரிசெய்ய தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகளையும் வழங்கினர்.
கப்பலில் மொத்தம் 7 பேர் இருந்தனர்; அவர்களில் 6 பேர் இந்தியர்கள், ஒருவர் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர். அனைவரும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லை பதற்றங்கள் நிலவினாலும், கடலில் ஆபத்தில் இருப்பவர்களை காக்கும் சர்வதேச விதிகளின்படி இந்த உதவி வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





