புதுடில்லி: தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் முடங்கிக் கிடக்கும் பி.எம். ஸ்ரீ பள்ளித் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.
இதற்காக, இரு மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கும் விரைவில் கடிதம் அனுப்பி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டு திட்டத்தை தொடங்குமாறு வலியுறுத்தப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பின் கீழ், நாடு முழுவதும் 14,500 அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் நோக்கில் பி.எம். ஸ்ரீ திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. வடமாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி ஆளும் பல மாநிலங்களில் இத்திட்டம் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியில் இருந்த கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. சமீபத்திய சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் ஆட்சி மாறியுள்ள சூழலில், மத்திய அரசு மீண்டும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.
இரு மாநிலங்களிலும் திட்டம் அமலாகும் என மத்திய உயரதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இதற்கு முன் MoU-வில் கையெழுத்திடாத மாநிலங்களுக்கு 2024–25 நிதியாண்டில் ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததாகவும், பி.எம். ஸ்ரீ நிதி பெற MoU அவசியம் எனவும் கூறப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள், மத்திய திட்டங்களை மாநிலங்களுக்கு திணிக்க கல்வி நிதியை கருவியாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டுகின்றன.





