டில்லி
சபரிமலை விவகாரம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பெண்கள் மீதான பாகுபாடு, மத சுதந்திரத்தின் எல்லைகள் போன்ற கேள்விகளை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, பிரிவு 32 கீழ் தாக்கல் செய்யப்பட்ட ஒத்த மனுக்களில் ஒரே மாதிரியான அணுகுமுறை அவசியம் எனக் குறிப்பிட்டது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையில் நடந்த 12வது நாள் விசாரணையில், பார்சி சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வேற்று மதத்தவரை திருமணம் செய்தால் சமூகத்திலிருந்து விலக்கப்படும் நடைமுறையை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் தாரியஸ் கம்பாட்டா வாதிட்டார். உண்மையான மத நடைமுறைகள் தொடர்பில் நீதிமன்றம் நிதானம் கடைபிடிக்க வேண்டும் என்றும், “நம்பிக்கை” என்ற பெயரில் மட்டும் கோருவது போதாது; அது அந்த மதத்தின் அடிப்படை தத்துவத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தாவூதி போரா சமூகத்தில் உள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து சீர்திருத்தவாதிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன், மதத்தின் பெயரில் ஒருவரை சமூகத்திலிருந்து விலக்குவது அரசியல் சாசனம் வழங்கும் வாழ்வுரிமையையும் தனிநபர் கண்ணியத்தையும் பாதிக்கும் என வாதிட்டார்.
இதற்கு நீதிபதி பி.வி. நாகரத்னா, 1962ல் இதே போன்ற வழக்கில் சமூக விலக்கை உச்ச நீதிமன்றம் சரி எனத் தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டி, அந்தத் தீர்ப்பை எதிர்க்க வேண்டுமெனில் சீராய்வு மனு அல்லது உரிய நிவாரண மனு வழியே செல்ல வேண்டும்; புதியதாக அடிப்படை உரிமை மீறல் எனக் கூறி பிரிவு 32 கீழ் நேரடியாக வழக்கு தொடர்வது சட்டப்படி ஏற்றதல்ல எனத் தெரிவித்தார்.
மேலும், சபரிமலை வழக்கில் பிரிவு 32 மனுவை நீதிமன்றம் ஏன் விசாரணைக்கு எடுத்தது என்ற விவாதம் முன்பே நடந்ததாக கூறிய நீதிபதி நாகரத்னா, அதே அமர்வு இன்று தாவூதி போரா மனுவில் வேறு நிலைப்பாடு எடுக்க முடியாது எனக் கண்டிப்புடன் குறிப்பிட்டார். இந்த வழக்கு விசாரணை புதன்கிழமையும் தொடர்கிறது.





