விஜய் தலைமையில் அரசு அமைந்தால், திமுக 6 மாதங்கள் எந்த இடையூறும் செய்யாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அரசியல் சட்ட சிக்கல்கள் உருவாவதை திமுக விரும்பவில்லை என்றும், விரைவில் மீண்டும் தேர்தல் நடத்தப்படுவதையும் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். புதிய அரசு தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை நிறைவேற்றுவதோடு, திமுக அரசு தொடங்கிய திட்டங்களையும் தொடர வேண்டும் என்றார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை உணவுத் திட்டம் மற்றும் பெண்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடரப்பட வேண்டும் என ஸ்டாலின் குறிப்பிட்டார். பெண்களுக்கு ரூ.2,500 வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவது கடினம் என்றும், குறைந்தபட்சம் ரூ.1,000 வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
2021 தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றப்பட்டதாகவும், நீட் தேர்வை நிறுத்துவது போன்ற சில வாக்குறுதிகள் மத்திய அரசின் கட்டுப்பாடு காரணமாக முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ஆறு இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் வாக்குறுதியை விஜய் கட்சி நிறைவேற்றும் என நம்பவில்லை என்றாலும், செய்தால் மகிழ்ச்சியடைவோம் என்றும் அவர் கூறினார்.





