சென்னை ராஜ்பவனின் முன்பாக புதன்கிழமை தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு, கட்சித் தலைவர் விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என முழக்கமிட்டனர். கோரிக்கையை வலியுறுத்தி பதாகைகளையும் ஏந்தினர்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றதாகவும், 5 இடங்களில் வென்ற காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளதாகவும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 112 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறினாலும், ஆட்சியமைக்க இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு விஜய் தமிழக கவர்னர் அர்லேக்கரை இருமுறை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் கடிதங்களை காட்டினால் மட்டுமே அழைப்பு விடுப்பேன் என கவர்னர் திட்டவட்டமாக தெரிவித்ததாகவும், இது தவெகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மேலும், விஜய்க்கு ஆதரவாக போராட்டம் நடத்தலாம் என சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவியதைத் தொடர்ந்து மெரினா பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





