சென்னை: தமிழக காவல் துறையின் உளவுத்துறைக்கு சிறப்பு பணியாக, அரவிந்த் மற்றும் விஸ்வேஷ் பாலசுப்பிரமணியன் சாஸ்திரி ஆகிய இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்பி) பணியாற்றும் விஸ்வேஷ் பாலசுப்பிரமணியன் சாஸ்திரி கேரளாவைச் சேர்ந்தவர். 2017ஆம் ஆண்டு தமிழக ஐபிஎஸ் பணிக்குத் தேர்வான இவர், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உதவி எஸ்பியாக பணியைத் தொடங்கினார். 2021ஆம் ஆண்டு கவர்னர் மாளிகை முகாம் அலுவலகத்தில் உதவி எஸ்பியாகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது அவர் டிஜிபி அலுவலகத்தில் சிறப்பு பணியாக உளவுத்துறை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியாக உள்ள அரவிந்த், சென்னை மாநகர காவல்துறையின் நுண்ணறிவு பிரிவில் எஸ்பியாகவும், தென்காசி மாவட்ட எஸ்பியாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

அரவிந்தும் டிஜிபி அலுவலகத்தில் சிறப்பு பணியாக உளவுத்துறை எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோட் பிறப்பித்துள்ளார்.

மேலும், அரியலூர் மாவட்ட எஸ்பி பொறுப்பை பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பிரபாகர் கூடுதலாக கவனிப்பார் என்றும், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி பொறுப்பை விழுப்புரம் எஸ்பி சாய் பிரனீத் கூடுதலாக கவனிப்பார் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.