சென்னை: தமிழகத்தில் புதிய அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபடும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்க மாட்டோம் என்று தமிழக பாஜ அறிவித்துள்ளது.
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், மக்கள் நலன் மற்றும் முன்னேற்றத்தை முன்னிறுத்தி சட்டமன்றத் தேர்தலில் பாஜ களம் கண்டதாகவும், தேர்தல் முடிவுகளை கட்சி மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.
இந்தத் தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பையோ அதிகாரத்தையோ மக்கள் பாஜவுக்கு வழங்கவில்லை என்று தாங்கள் கருதுவதாகவும், மக்களின் விருப்பத்தையும் தேர்தல் முடிவுகளையும் மதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால், புதிய அரசு அமைக்கும் எந்த முயற்சியிலும் தமிழக பாஜ தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும், அத்தகைய முயற்சிகளில் நேரடிப் பங்களிப்பு எதையும் மேற்கொள்ளாது என்றும் கூறினார்.
மேலும், ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தக் கட்சிக்கும் பாஜ வாக்களிக்காது என்பதையும் மக்களுக்கு தெரிவித்தார்.





