சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்காத சூழலில் ஆட்சி அமைப்பது தொடர்பாக, தமிழக அரசியல் கட்சிகள் எடுத்த நிலைப்பாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாராட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், தனிப் பெரும்பான்மை இல்லாதபோது கவர்னரின் கடமை என்ன என்பதைக் கேள்வியாக முன்வைத்தார்.
எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, முதன்மைக் கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைப்பதே அரசியல் விதி என்றும், பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டசபைத் தளமே; ராஜ்பவன் அல்ல என்றும் அவர் கூறினார்.
இந்த நடைமுறைக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு (1994 (3) SCC 1) ஆதாரமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்த விதியை விளக்கி வலியுறுத்திய தமிழக அரசியல் கட்சிகளை பாராட்டுவதாக தெரிவித்தார்.





