பீஜிங்
சீனாவில் அதிபர் ஷீ ஜின்பிங் முன்னெடுத்து வரும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளின் பின்னணியில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் இருவருக்கு நீதிமன்றம் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட மரண தண்டனை விதித்துள்ளது.
தண்டனை பெற்றவர்கள் 2018 முதல் 2023 வரை பாதுகாப்பு அமைச்சராக இருந்த வேய் பெங்ஹே மற்றும் அவருக்குப் பின் குறுகிய காலம் (சுமார் எட்டு மாதங்கள்) பதவி வகித்த லி ஷாங்பு. வேய் மீது பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், லி மீது ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
ஷீ ஜின்பிங்கின் ராணுவச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக 2015ல் உருவாக்கப்பட்ட ஏவுகணை படைக்கு இருவரும் முன்பு தலைமை தாங்கியிருந்தனர்.
சீன சட்டப்படி ‘சஸ்பெண்ட்’ மரண தண்டனை என்றால், அடுத்த இரண்டு ஆண்டுகள் அவர்களின் நன்னடத்தை கண்காணிக்கப்படும்; பின்னர் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும், சட்டவிரோதமாக சேர்த்த சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்யவும், வாழ்நாள் முழுவதும் எந்த அரசியல் பொறுப்புகளையும் வகிக்க முடியாத வகையில் தடை விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





