திருச்சி: தற்போதைய அரசியல் சூழலில் ‘புதிய சீன்’ உருவாக்கவே நடிகர் ரஜினிகாந்த் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசியதாக காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. கிறிஸ்டோபர் திலக் தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) அடுத்தடுத்து என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை கவனிக்க வேண்டிய காலம் என கூறினார். மேலும், அடுத்த 10 நாட்களுக்குள் புதிய அரசு பொறுப்பேற்கும் என்றும், த.வெ.க. மற்றும் தி.மு.க. பெற்ற வாக்குகள் தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்றக் கூடாது என்ற மக்களின் நோக்கத்தை காட்டுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதே நோக்கத்தில்தான் ‘தமிழகத்தில் பா.ஜ.க. நுழையக் கூடாது’ என்பதற்காக த.வெ.க.-க்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததாக அவர் கூறினார். கடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 39 பேர் வெற்றி பெற்றதை குறிப்பிட்டு, அதில் கூட்டணி கட்சிகளின் வாக்குகளும் உள்ளதை மறந்து சிலர் பேசுவதாகவும் விமர்சித்தார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யச் சொல்பவர்கள், அதேபோல் எம்.பி.க்களையும் ராஜினாமா செய்யச் சொல்வார்களா என கேள்வி எழுப்பினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கூட்டணி கட்சிகளின் வாக்குகளால் தான் வெற்றி பெற்றார்; அவர் ராஜினாமா செய்வாரா என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மற்ற கட்சிகளைப் போல விஜய் கட்சியில் உள்ளவர்கள் பெரும் செலவு செய்து தேர்தலில் போட்டியிடவில்லை என்பதால் செலவை மீட்டெடுக்க வேண்டும் என்ற அழுத்தம் இருக்காது; இது ஊழலுக்கும் வழிவகுக்காது என்றார். பா.ஜ.க.வுடன் நேரடி கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வுடன் தி.மு.க. எப்படி கூட்டணி அமைக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.





