விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி (CPI(M)) முடிவு செய்துள்ளன. இரு கட்சிகளுக்கும் சட்டசபையில் தலா 2 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வென்ற தவெக, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. ஆனால், கூட்டணி போதிய பெரும்பான்மை பெறாத நிலையில், அரசு அமைக்க விஜய்யை கவர்னர் அழைக்கவில்லை.

இந்த சூழலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிகவிடம் தவெக சார்பில் ஆதரவு கோரி கடிதம் வழங்கப்பட்டதாகவும், நிர்வாகிகள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெக அரசை வெளியில் இருந்து ஆதரிக்க தீர்மானித்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கடிதத்தை அதிகாரபூர்வமாக வழங்கியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு கடிதத்தை இ-மெயில் மூலம் அனுப்பியுள்ளது.

இரு கட்சிகளின் முடிவைத் தொடர்ந்து, விசிகவும் ஆதரவு அளிக்கும் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.