புதுடில்லி: தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ இணையதளமான ‘இசிஐ நெட்’ மீது பெருமளவில் சைபர் தாக்குதல்கள் நடந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் வெளியிட்ட அறிக்கையில், தேர்தல் நடைமுறைகள் சுமுகமாகவும் வேகமாகவும் நடைபெற ‘இசிஐ நெட்’ முக்கிய பங்காற்றியதாக கூறினார். மேலும் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் அல்லது வன்முறைகள் இன்றி தேர்தல் அமைதியாக முடிந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஓட்டுப்பதிவு உயர்ந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், தேர்தல் காலத்தில் ‘இசிஐ நெட்’ தளத்தை குறிவைத்து 68 லட்சம் முறை சைபர் தாக்குதல்கள் முயற்சிக்கப்பட்டதாகவும், அவற்றை தேர்தல் கமிஷனின் தொழில்நுட்ப குழு திறம்பட கையாள்ந்து முறியடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக ஓட்டு எண்ணிக்கை நாளன்று தாக்குதல்களின் தீவிரம் அதிகமாக இருந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.