சென்னை: தவெக மட்டுமல்ல, பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என்று தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தவெக தலைவர் விஜய் பதவியேற்பதை தாம் தடுக்கவில்லை என்றும், பெரும்பான்மை இல்லாத கட்சியை ஆட்சியமைக்க அழைப்பது எப்படி என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார். பெரும்பான்மையை நிரூபிப்பதே முக்கியம் என்றார்.

யார் யார் ஆதரவு அளிக்கிறார்கள் என்ற விவரங்களை கோரிக்கை வைக்கும் தரப்பு அளிக்க வேண்டும் என்றும், பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களையும் கவர்னர் மாளிகைக்கு அழைத்து வர வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

அதிமுக மற்றும் திமுக இணைந்து வந்து ஆட்சியமைக்க உரிமை கோரினால் அனுமதிப்பீர்களா என்ற கேள்விக்கு, பெரும்பான்மை ஆதாரங்களுடன் எந்தக் கட்சி வந்தாலும் அதை ஏற்று பரிசீலிப்பேன் என்று பதிலளித்தார்.

ஆதரவு விவரங்களை வழங்கி, பின்னர் சட்டசபை தரையில் பெரும்பான்மையை நிரூபித்தால் போதுமானது என்றும், அடுத்த 2 அல்லது 3 நாட்களில் பெரும்பான்மையுடன் யாரும் உரிமை கோரவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பேன் என்றும் கவர்னர் தெரிவித்தார்.