சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாக்களை உடனடியாக ஒப்படைக்க முடியாது என முன்னாள் அமைச்சர்கள் பொதுப்பணித்துறை (PWD) அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு அமைச்சர்கள் தங்குவதற்காக சுமார் 60 பங்களாக்கள் உள்ளன. அமைச்சர்களின் அலுவலகம், குடியிருப்பு, பாதுகாவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளும் இதில் அடங்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் 23க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இவற்றைப் பயன்படுத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததால் தி.மு.க. ஆட்சி முடிவடைந்த நிலையில், புதிய அமைச்சர்களுக்காக பங்களாக்களை ஒதுக்குவதற்கு முன் பெயின்ட், கழிப்பறை பராமரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை திட்டமிட்டது. இதற்காக, செயற்பொறியாளர் மூலம் முன்னாள் அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு காலி செய்ய உத்தரவு அனுப்பப்பட்டது.

ஆனால், ஐந்துக்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் நேற்று செயற்பொறியாளரை நேரடியாக தொடர்புகொண்டு, இரண்டு மாதங்களுக்கு பிறகே பங்களாக்களை காலி செய்ய முடியும் என கூறியதாக தகவல். பொதுவாக இரண்டு மாதங்கள் வரை அவகாசம் வழங்குவது வழக்கம் என்றும், உடனடியாக காலி செய்யச் சொன்னதால் கடும் அதிருப்தி ஏற்பட்டதாகவும், அறைகளில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல நேரம் தேவை என குடும்பத்தினர் தெரிவித்ததாகவும் ஒரு அதிகாரி கூறினார்.