தெலுங்கானா ஹைதராபாத்தில், நள்ளிரவு நேரங்களில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்ற தொடர்ச்சியான புகார்களைத் தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பை மதிப்பிட போலீசார் ரகசியமாக ‘அண்டர்கவர்’ நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மல்கஜ்கிரி போலீஸ் கமிஷனரும் ஐ.பி.எஸ். அதிகாரியுமான சுமதி, சாதாரண உடையில் தில்சுக் நகர் பஸ் நிறுத்தத்திற்கு நள்ளிரவு 12:30 மணியளவில் சென்று தனியாக நின்றார்.

அப்போது சில ஆண்கள் அவரைச் சுற்றி நின்று கேலி பேசுதல், ஆபாசமாக பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். சிலர் தங்கள் வாகனத்தில் வருமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

நள்ளிரவு 12:30 மணி முதல் அதிகாலை 3:30 மணி வரை நடந்த இந்த நடவடிக்கையில், மொத்தம் 40 பேர் அணுகி அத்துமீற முயன்றதாக கூறப்படும் நிலையில், அருகில் பதுங்கியிருந்த போலீசார் அவர்களைப் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பிடிபட்டவர்களில் பெரும்பாலானோர் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில் மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதில் இருந்தது தெரியவந்தது. அவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார், பெற்றோர்களையும் அழைத்து அறிவுரை வழங்கினர். பாதுகாப்பற்ற பொது இடங்களை கண்டறிந்து, இரவு நேரத்தில் தனியாக நிற்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை புரிந்துகொள்ளவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் கூறினர்; இது ஹைதராபாத் பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.