ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மகேஷ் ஜோஷியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், பொது சுகாதார பொறியியல் துறை (PHED) அமைச்சராக மகேஷ் ஜோஷி பணியாற்றினார். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம் அவரது துறை கட்டுப்பாட்டில் செயல்படுத்தப்பட்டது.

ஒப்பந்தங்களை வழங்குவதற்காக லஞ்சம் பெற்றதாகவும், இதன் மூலம் சுமார் ரூ.960 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாகவும் விசாரணை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. இதுதொடர்பாக 2024ல் லஞ்ச ஒழிப்பு துறையினர் ஜோஷி மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து கடந்த ஆண்டு அவரை கைது செய்தது. சுமார் ஏழு மாதங்கள் சிறையில் இருந்த பின்னர், உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.

விசாரணை தொடர்ந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் மாநிலம் முழுவதும் 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி 10 இன்ஜினியர்களை கைது செய்தது. சில நாட்களுக்கு முன் PHED கூடுதல் தலைமை செயலர் சுபோத் அகர்வால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜெய்ப்பூரில் உள்ள ஜோஷியின் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.