திமுக-அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்ற பேச்சுகள் வதந்தி மட்டுமே என திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் முடிவுகள் யாருக்கும் தெளிவான, தீர்க்கமான பெரும்பான்மையை வழங்காத நிலையில் அரசியல் சூழலில் குழப்பம் உருவாகியுள்ளதாக கூறினார். அந்த நிலைதான் பல்வேறு ஊகங்களுக்கும் காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கவர்னர் தொடர்பாக திமுக தொடர்ந்து புகார்கள் எழுப்பி வந்துள்ளதாகவும், அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் கவர்னரின் செயல்பாடு ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற கேள்வி தற்போது விவாதமாக இருப்பதாகவும் கனிமொழி கூறினார். இந்த விஷயத்தில் திமுகவின் நிலைப்பாடு மாறாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
திமுகவின் நிலை ‘கவர்னர் வேண்டாம்’ என்பதே என்றும், அந்த நிலைப்பாட்டில் இருந்து எந்த காலத்திலும் திமுக விலகாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், திமுக-அதிமுக வெளியில் இருந்து ஆதரவு அளிக்கலாம் என்ற கேள்விக்கு, “நிறைய வதந்திகள் இருக்கின்றன; அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று கனிமொழி பதிலளித்தார்.





