மயிலாடுதுறையில் வியாழக்கிழமை, தவெக தலைவர் விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத கவர்னரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிட்டப்பா அங்காடியில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பானு சேகர் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு தமிழக கவர்னர் மற்றும் பாஜகவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும், கட்சிக் கொடியுடன் பானு சேகர் உள்ளிட்டோர் அருகிலிருந்த டீக்கடைக்கு சென்று தேநீர் அருந்திவிட்டு வெளியே வந்தனர். அப்போது அங்கு வந்த திமுகவினர் சிலர், போராட்டம் நடத்தியதைக் குறித்து கேள்வி எழுப்பி, காங்கிரஸ் கட்சியினரிடமிருந்த கொடிகளை பறித்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் கொடிகளை சாலையில் வீசியதுடன் காங்கிரஸ் கட்சியினரை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலிலிருந்து தப்பிக்க காங்கிரஸ் கட்சியினர் வாகனங்களில் ஏறி அங்கிருந்து விலகினர். இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.