இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக முதன்முறையாக வந்த வியட்நாம் அதிபர் டோ லாம், புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
சந்திப்பின்போது, இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் கைவினைத் திறனை பிரதிபலிக்கும் வகையில் பிரதமர் மோடி சில சிறப்புப் பரிசுப் பொருட்களை வழங்கினார்.
அதில் ஒன்றாக, உத்தரப் பிரதேசம் லக்னோவில் உள்ள தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட “நமோ 108” என்ற தாமரை இடம்பெற்றது. இதில் துல்லியமாக 108 இதழ்கள் இருப்பதாகவும், 108 என்ற எண் ஹிந்து, பவுத்தம் மற்றும் சமண மதங்களில் புனிதமாகக் கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், உத்தரப் பிரதேசம் மொராதாபாத் கைவினை கலைஞர்கள் வடிவமைத்த புத்தர் வெண்கலச் சிலையும் பரிசாக வழங்கப்பட்டது. போதி மரத்தின் அடியில் தியான நிலையில் அமர்ந்திருப்பது போல வடிவமைக்கப்பட்ட இந்தச் சிலையில், புத்தர் வலது கையால் அபய முத்திரை காட்டுவது போலவும், இடது கையில் சிறிய கிண்ணம் ஏந்தியபடியும் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், உத்தரப் பிரதேசம் வாரணாசியில் பாரம்பரிய கைத்தறி நுணுக்கங்களுடன் நெய்யப்பட்ட உயர்தர பனாரஸ் பட்டுத் துணியும் வழங்கப்பட்டது. இது வியட்நாமின் பாரம்பரிய உடையான “ஆவோ தய்” தைப்பதற்கு ஏற்ற வகையில், இரு நாடுகளின் கலாசார ரசனைகளை இணைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டதாக கூறப்பட்டது.





