புதுடில்லி: சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக வினியோகிக்க எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் ரொக்கம் உள்ளிட்ட பொருட்கள் ரூ.1,444.96 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதே காலகட்டத்தில் மற்ற ஐந்து மாநிலங்களில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. முடிவுகள் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.
தேர்தல் காலத்தில் 7,470 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டதாக கமிஷன் கூறியது. வாகன தணிக்கை உள்ளிட்ட சோதனைகளில் ரொக்கம், மதுபானம், போதைப்பொருள், தங்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
ரொக்கப் பறிமுதலில் தமிழகம் அதிகபட்சமாக ரூ.105.2 கோடி பதிவு செய்துள்ளது. மேலும் ரூ.165.86 கோடி மதிப்பிலான தங்கமும், ரூ.307.65 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் மதுபானம் ரூ.151.86 கோடி மதிப்பிலும், போதைப்பொருள் ரூ.130.28 கோடி மதிப்பிலும் அதிகபட்சமாக கைப்பற்றப்பட்டதாக கமிஷன் குறிப்பிட்டது. 2021-ல் நடந்த ஐந்து மாநில தேர்தல்களில் ரூ.1,029.93 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2026-ல் இது 40.14% உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தது.





