மத நடைமுறைகள் மற்றும் சடங்குகளை ஒவ்வொன்றாக நீதிமன்றங்கள் கேள்வி கேட்கத் தொடங்கினால், நாட்டின் நாகரிகத்தின் அடிப்படையும் மத கட்டமைப்பும் சிதையக்கூடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கேரளாவின் சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு குறித்தும், பல்வேறு மதங்களில் மதச் சுதந்திரத்தின் எல்லைகள் குறித்தும், 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மனுக்களை விசாரித்து வருகிறது. இந்தத் தொகுப்பில் தாவூதி போரா மற்றும் பார்சி சமூகங்களில் கலப்பின திருமணம் செய்த பெண்களை சமூகத்திலிருந்து விலக்குவது தொடர்பான மனுக்களும் இடம்பெற்றுள்ளன.

தாவூதி போரா தொடர்பான வாதங்களில், நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் எம்.எம். சுந்தரேஷ், மதம் சமூகத்துடன் பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்திருப்பதாகக் குறிப்பிட்டனர். ஒவ்வொரு சடங்குக்கும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடினால், கோவிலை திறப்பது–மூடுவது போன்ற சிறு விஷயங்களுக்கே நூற்றுக்கணக்கான மனுக்கள் வரக்கூடும் என்றும், தனிநபர்–அமைப்பு கருத்து வேறுபாடுகளை நீதிமன்றம் தீர்க்க முயன்றால் மதங்கள் உடைந்து சிதறக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

சீர்திருத்தவாதிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன், அரசியல் சாசனத்தின் 25, 26வது பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் மதச் சுதந்திரம் தனிநபரின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது; அரசியல் சாசனத்திற்கு எதிரான நடைமுறைகள் தொடர அனுமதிக்கக் கூடாது என வாதிட்டார். இதற்கு பதிலளித்த நீதிபதி ஜாய்மால்யா பக்சி, ஒரு மத நடைமுறை அரசியல் சாசனத்தின் அடிப்படையில் செல்லுபடியாகுமா என்பதை ஆராய “அரசியலமைப்பு ஒழுக்கநெறி”யை அளவுகோலாகப் பயன்படுத்துவது சரியான வழியாக இருக்காது; 26வது பிரிவின் ஒழுக்கநெறி என்ற கருத்துக்குள் அதை பொருத்திப் பார்ப்பதும் சரியான விளக்கமாக அமையாது எனக் கூறினார்.

இந்த வழக்கு அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.