சென்னை: தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் தாமதம் நீடித்து வரும் நிலையில், அன்றாட நிர்வாகப் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும் என்பதற்காக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் நிர்வாக நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்கியுள்ளார்.
லோக் பவன் வெளியிட்ட தகவலின்படி, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட பள்ளிக் கல்வித்துறை உயர் அலுவலர்களுக்கு கவர்னர் அறிவுறுத்தினார். அவரது உத்தரவின் பேரில் வியாழக்கிழமை முடிவுகள் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
புதிய கல்வித்துறை அமைச்சர் பொறுப்பேற்கும் வரை முடிவுகளை நிறுத்தி வைப்பது மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை தாமதப்படுத்தும் என்பதால், மாணவர்களின் நலன் கருதி தாமதமின்றி முடிவுகளை வெளியிட வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மே 4 அன்று தேர்தல் முடிவுகள் வெளியானபோதும் எந்த அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அரசு அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், அத்தியாவசிய நிர்வாகப் பணிகளில் இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் நோக்கில் கவர்னர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.





