தமிழக 12ம் வகுப்பு (பிளஸ் 2) பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) அரங்கில் தேர்வுத்துறை முடிவுகளை அறிவித்தது.
மாநில பாடத்திட்டத்தின் கீழ் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. மொத்தம் 8.27 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதிய நிலையில், மொத்த தேர்ச்சி விகிதம் 95.20 சதவீதமாக பதிவானது.
மாணவிகள் 97% தேர்ச்சி பெற்ற நிலையில், மாணவர்கள் 93.19% தேர்ச்சி பெற்றனர். மாவட்ட வாரியாக ஈரோடு 98.87% பெற்று முதலிடம் பிடித்தது; அடுத்து சிவகங்கை (98.05%), திருநெல்வேலி (97.84%), கன்னியாகுமரி (97.63%) மற்றும் திருச்சி (97.50%) இடம்பிடித்தன.
பள்ளி வாரியாக 2,639 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன; இதில் 489 அரசு பள்ளிகளும் அடங்கும். அரசு பள்ளிகள் 92.16%, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 96.14%, தனியார் பள்ளிகள் 98.72% தேர்ச்சி பெற்றன.
தற்காலிக மதிப்பெண் பட்டியல் மே 13 முதல் வழங்கப்படும். தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28 முதல் ஜூலை 7 வரை துணைத் தேர்வுகள் நடைபெறும். முடிவுகள் குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டுள்ளன; tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in தளங்களில் பார்க்கலாம். வாட்ஸ்அப்பில் 78452 52525 என்ற எண்ணிற்கு “Hi” அனுப்பி, ‘Directorate of Government Examinations’ பிளஸ் 2 என்பதைத் தேர்வு செய்து விவரங்களை உள்ளீடு செய்தும் முடிவை அறியலாம்.





