தஞ்சாவூர் த.வெ.க. எம்.எல்.ஏ. விஜய் சரவணன் நண்பர்களுடன் சேர்ந்து மதுபாட்டிலுடன் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் பரவியுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட விளக்கத்தில், அந்தக் காட்சி சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த தனிப்பட்ட நிகழ்வில் பதிவான பழைய வீடியோ என கூறி, அதன் பரவலைக் கண்டித்தார். அடையாளம் தெரியாத புதிய வாட்ஸ்அப் எண்களிலிருந்து சில சமூக வலைதள பிரபலங்களுக்கு அனுப்பி, அவதூறு பரப்ப திட்டமிட்ட சதி நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தேர்தல் முடிவுகள் வெளியான நாளின் உண்மை நிலை ஊடகங்களுக்கும் தஞ்சை மக்களுக்கும் நன்றாக தெரியும் என்றும், பழைய வீடியோவை வைத்து மக்களின் தீர்ப்பை கொச்சைப்படுத்த முயல்வது சிலரின் அரசியல் விரக்தியை காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய போலி செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்புபவர்கள் மீது, மேலும் புதிய எண்கள் மூலம் அவதூறு பரப்ப தூண்டுபவர்கள் மீது சட்டரீதியாகவும் சைபர் கிரைம் வழியாகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். இவ்வகை வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.